Last Updated:
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது குண்டமாலா கிராமம். இங்கு பாயும் இந்திராயணி ஆற்றையும் அண்டை கிராமங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆற்றின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், புனே சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்திராயணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் குவிந்த சுற்றுலா பயணிகள் அடுத்த சில நிமிடங்களில் தங்களுக்கு என்ன நடக்க இருக்கிறது எனத் துளியும் தெரியாமல் ஆற்றின் ரம்மியக் காட்சிகளை கண்டு களித்தனர்.
அளவுக்கு அதிகமாக சென்ற தண்ணீரால் உருவான அழுத்தம் மற்றும் பழமை காரணமாக திடீர் சத்தத்துடன் பாலம் இடிந்து விழுந்தது.
சம்பவத்தின் போது பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சுமார் 20 முதல் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் 4 பேரின் சடலங்களை கைப்பற்றினர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
June 15, 2025 9:25 PM IST
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி… 25 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டதால் அச்சம்


