புத்ராஜெயா:
புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்த ஆண்கள் அடங்கிய கும்பலை போலீஸ் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்தக் குழு குறைந்தது ஒன்பது வீடு உடைப்பு வழக்குகளுடன் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரசிண்ட் 11 மற்றும் பிரசிண்ட் 14 பகுதிகளில் வீடு திருட்டு வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் புத்ராஜெயா குற்றப் புலனாய்வுத் துறை இணைந்து “Op Pintu Putra” எனும் சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளதாக, புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பிரசிண்ட் 14 இல் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
இருவர் வீட்டுக்குள் நுழைந்திருந்த நிலையில் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மூன்றாவது நபர், தப்பிச் செல்ல வைத்திருந்த காரில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது, வீடுகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும்
ஹைட்ராலிக் ஸ்ப்ரெடர்கள், திருப்பிக் கருவிகள், இடுக்கி உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வெள்ளை வோக்ஸ்வாகன் பாசாட் செடான் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அது சீனாவைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணையின் படி, இந்தக் குழு பொதுவாக இரவு 8 மணி முதல் 10 மணி வரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைத் தேர்வு செய்து உள்ளே நுழைந்துள்ளனர். நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை குறிவைத்திருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் விலையுயர்ந்த பொருட்களுடன் உள்ள கைப்பைகளை எடுத்து, பொருட்களை எடுத்துவிட்டு பைகளை வேறு இடத்தில் தூக்கி எறிந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மலேசியாவில் எவ்வளவு காலமாக உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த போலீசார் குடிநுழைவு துறையுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர் என்றும், இந்தக் குழு குறைந்தது மூன்று மாதங்களாக புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் செயல்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் 17 வீடு உடைப்பு வழக்குகள் பதிவாகிய நிலையில், இந்த ஆண்டு 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இந்தக் குழுவுடன் தொடர்புடைய ஒன்பது வழக்குகள் அடங்கும் என ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.




