புத்தாதான்:
இன்று காலை வானிலை மோசமாக இருந்தபோதிலும், 17வது சபா மாநில பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு, புத்தாதானில் உள்ள செக்கோலா அகமா ரக்யாட் கெம் லோக் காவி மையத்தில் சுமூகமாக தொடங்கியது.
இந்த மையத்தில் மொத்தம் 2,569 இராணுவ வீரர்களும் அவர்களின் 528 துணைவர், துணைவிகளும் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினாலும், பல இராணுவ பணியாளர்கள் மற்றும் அவர்களது துணைவர்கள் காலை 7 மணிக்கும் முன்பே வரத் தொடங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளையும் உடன் கொண்டு வந்தனர்.
மையம் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் காலை 6.30 மணியளவில் வந்து வாக்குப்பதிவு ஏற்பாடுகளைச் சோதித்தனர்.
மையத்துக்கு முதலில் வந்தவர்களில் 5வது பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டத்தோ நூர்ருல் அஸ்ரில் அரிஃபின், அவரது மனைவி டத்தின் நோரிசா முகமட் ரஷீத் உடன் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளையும் பதிவு செய்தனர்.




