வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையின்படி வளர்ச்சி அளவுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஜப்பானின் பொருளாதாரமும், 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இருந்தாலும், 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியா 8 புள்ளி 2 சதவிகிதம் என்ற அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜப்பானின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக, சுமார் 0.6 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதனால் இந்தியா, ஜப்பானை முந்திவிட்டதாக சர்வதேச பொருளாதார நிதியம் தெரிவித்துள்ளது.
2030-க்குள் இந்தியா ஜெர்மனியையும் முந்தி உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, ஜப்பான் இந்தியாவை விட பல மடங்கு முன்னிலையில் உள்ளது. ஜப்பானியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 31 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்கள். இந்தியர்களின் ஆண்டு வருமானமோ சராசரியாக இரண்டு லட்சத்து அறுபத்து மூன்றாயிரம் ரூபாயாக இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, விவசாயம் மிகப் பெரிய துறையாக உள்ளது. இது மட்டுமல்லாமல், ‘மேக் இன் இந்தியா’ மூலம் உற்பத்தித் துறையை வலுப்படுத்தி வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், வங்கி, காப்பீடு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உலக அளவில் நம்பர் ஒன் நாடாக திகழ்கிறது ஜப்பான்..
இந்தியாவை பொறுத்தவரை வலிமையாக கருதப்படுவது அதன் இளம் மக்கள் தொகை. இந்தியாவின் சராசரி வயது 28. ஜப்பானின் சராசரி வயது 49. ஜப்பான் மக்கள் தொகையில் 29 சதவிகிதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதனால் அங்கு தொழிலாளர் பற்றாக்குறையும் சுகாதாரச் செலவுகளும் அதிகரித்துள்ளன. உலகின் மிகச்சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பான் முக்கியமானது. அங்கு, Shinkansen அதிவேக ரயில்கள் மற்றும் நவீன துறைமுகங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
இந்தியா, தற்போது உள்கட்டமைப்பை மேம்படுத்த 1.4 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான ‘கதி சக்தி’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் புல்லட் ரயில் திட்டங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பொதுக் கடன், அதன் GDP-ல் சுமார் 85 சதவிகிதம் வரை உள்ளது. உலகின் மிக உயர்ந்த கடன் சுமை கொண்ட நாடுகளில் ஒன்று ஜப்பான். அந்நாட்டின் கடன் விகிதம் சுமார் 260 சதவிகிதம்.
இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு சுமார் 62.94 லட்சம் கோடி ரூபாய்.. ஜப்பானின் அன்னியச் செலாவணி இருப்பு 107.87 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தற்போதைய வேகம் தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

