பெங்களூரு அருகே ஒசக்கோட்டை நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் சையது இம்ரான். சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சையது இம்ரான், மூடநம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.
இந்நிலையில், போலி சாமியார் ஒருவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று சொல்ல, நரபலி கொடுப்பதற்காக குழந்தையை தேடி அலைந்து இருக்கிறார். இதற்காக வடமாநில தொழிலாளி ஒருவரிடம் பணம் கொடுத்து, அவரது ஆண் குழந்தையை இம்ரானும், அவருடைய மனைவியும் தத்தெடுத்து உள்ளனர்.
தங்களுக்கு குழந்தை இல்லை என்று பொய் சொல்லி, பண ஆசை காட்டி குழந்தையை வாங்கி இருக்கிறார் இம்ரான். அதைத் தொடர்ந்து புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் குழந்தையை பலி கொடுப்பதற்கான பூஜை பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
திங்களன்று இரவு தனது வீட்டில் பூஜைகள் செய்து, குழந்தையை பலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார். பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து பூஜைகள் செய்து கொண்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. சையது இம்ரான் நரபலி பூஜைகள் செய்துகொண்டிருந்தபோது, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அங்கு, இம்ரானின் வீட்டை தேடி கண்டுபிடித்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்குள் அதிகாரிகள் பார்த்த காட்சி அவர்களை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அந்த வீட்டின் ஒரு அறையில், சிறிய குழி ஒன்று தோண்டப்பட்டு, நரபலி கொடுத்து குழந்தையை புதைப்பதற்காக தயாராக வைக்கப்பட்டு இருந்தது.
புதையலுக்காக குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் சுலிபெள்ளி கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Bangalore,Karnataka

