Last Updated:
புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் இடையே உடன்படிக்கை இல்லாமல், இரு கட்சிகளும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
இந்நிலையில், யூனியன் பிரதேசத்தில் திமுக மற்றும் என்.டி.ஏ. கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு இருந்துவருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் தொகுதி உடன்படிக்கை ஏற்படாத சூழலில், இரு கட்சியினரும் தனித்தனியே வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தனர்.
என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், கூட்டணியில் தொடர்வதா எனும் யோசனையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருந்துவருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ல.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்திவருவதாக சொல்லப்படுகிறது. மேலும், நேற்று அவர் தனது ஆன்மீக குருவான சேலத்தில் உள்ள அப்பாசாமி கோயிலில் வழிபட்டார். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அந்தக் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டே முடிவெடுப்பார் என சொல்லப்படும் நிலையில் நேற்றைய வழிபாடு கவனம் பெற்றது.
இந்நிலையில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் 17 தொகுதிகளைக் கேட்பதாகவும், மீதமுள்ள 13 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒன்று ஒதுக்கிவிட்டு, திமுக 11 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கு திமுக அதிருப்தி தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும், 13 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலும் வென்றிருந்தன. எனவே இந்த முறை திமுக – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சமமாக தலா 14 தொகுதிகளை எடுத்துக்கொண்டு, கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என திமுக தரப்பில் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசித்து மாலை தெரிவிப்பதாகக் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம், சென்னையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் புதுச்சேரி திமுகவினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் புதுச்சேரிக்கு வந்து கூட்டணிக் கட்சியுடன் ஆலோசனை நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை சேர்ந்து காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்க ஆலோசிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது மாலை 5 மணிக்கு தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது.
Puducherry (Pondicherry)


