Last Updated:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ. கூட்டணி அமோக வெற்றி; 12 தொகுதிகளில் வாகை சூடியது என்.ஆர்.காங்கிரஸ்
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
puducherry
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருபுவனை தொகுதியில் சாய் சரவண குமார், மணவெளி தொகுதியில் ராமு வெற்றி பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி, கதிர்காமம் தொகுதியில் அழகானந்தம், நெடுங்காடு தொகுதியில் விக்னேஸ்வரன், மாஹே தொகுதியில் அசோக் குமார் ஆகியோர் சுயேச்சைகளாக வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி, கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளை மீறி, “நட்பு ரீதியான போட்டி” என்ற பெயரில் கூடுதலாக 6 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் மூலம் மொத்தம் 22 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஊசுடு தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த நட்புப் போட்டி வேறு எந்த நன்மையையும் காங்கிரஸுக்குத் தரவில்லை. மாறாக, நட்புக் கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

முதல்வர் என். ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த சூழலில், கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஏற்கெனவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த என். ரங்கசாமி, மீண்டும் புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
2021-ஐ தொடர்ந்து இம்முறையும் தேசிய ஜனநாயக கூட்டணியை தொடர்ந்த என்.ஆர்.காங்கிரஸ், முந்தைய தேர்தலைவிட மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு இடங்கள், அதாவது 6 தொகுதிகளை எந்தக் கட்சியும் பெறாததால் முதல்வர் விரும்பினால் மட்டுமே அந்த அந்தஸ்து கிடைக்கும்.


