Last Updated:
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அக்கட்சியினர் அனுமதி கோரினர். இது குறித்து டி.ஐ.ஜி. பேட்டி அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுவந்தார். இறுதியாக கரூர் மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு தனது பிரச்சாரப் பயணத்தை நிறுத்தி வைத்திருந்த விஜய், சேலத்தில் மக்கள் சந்திப்போடு மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டு தவெக தரப்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், உரிய கால அவகாசத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இதன்பிறகு அண்மையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் கூட்டரங்கில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இந்நிலையில், அடுத்தாண்டு தமிழ்நாடோடு சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் புதுச்சேரியில் டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த தவெக திட்டமிட்டு அனுமதி கோரியது.
இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி தவெக நிர்வாகிகள், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், புதுச்சேரி காவல்துறையும் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்தது.
இதனையடுத்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து அவரிடம் பேசினார். இந்நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித் குமார் சிங்கிளா மற்றும் உயர் அதிகாரிகளும், தவெக சார்பில் ஆனந்து, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், “புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி இல்லை. திறந்த இடத்தில் பொது கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம். இடத்தை அவர்களே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி மக்கள் சந்திப்பு நடத்த முடியும்? எனவே தேதியை மாற்றி தள்ளி வைக்க கூறியுள்ளோம்” என புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Puducherry (Pondicherry)
December 02, 2025 4:40 PM IST


