Last Updated:
புதுச்சேரியில், தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதல் முறையாக விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை, தவெக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தவெக வழங்கிய கியூ ஆர் கோட் அடங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை, தவெக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் புதுச்சேரியில் இருப்பவர்களுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் பாண்டி மெரினா, மைதானத்திற்கு பின்புறம், பழைய துறைமுகப் பகுதி என 3 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Puducherry (Pondicherry)
December 07, 2025 9:09 PM IST


