Last Updated:
“இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது” என தவெக தலைவர் விஜய் பேசியதற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் கொடுத்துள்ளார்.
“இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரி மக்களுக்காக இந்த விஜய் எப்பவும் துணை நிற்பான்” என இன்றைய கூட்டத்தில் விஜய் பேசியதற்கு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதல் முறையாக தவெக தலைவர் விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஸ்கேனிங் முறையில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், “மத்திய அரசிற்கு தான் தமிழ்நாடு, புதுச்சேரி தனித்தனி மாநிலம். ஆனால் நமக்கு நாம் அனைவரும் ஒன்றுதான். தனி மாநிலங்களாக இருப்பதால் நாம் அனைவரும் சொந்தங்கள் இல்லை என்று கிடையாது.
தமிழகத்தில் எம்ஜிஆரை மிஸ் பண்ணிடாதீங்க என்று அலர்ட் செய்தது புதுச்சேரி மாநிலம் தான். விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள். அது தவறு. புதுச்சேரி பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன்.
புதுச்சேரிக்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காததால் கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரி மக்களுக்காக இந்த விஜய் எப்பவும் துணை நிற்பான்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்துள்ளார். விஜய் பேச்சு தொடர்பாக பேசிய நமச்சிவாயம், “புதுச்சேரி நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார். அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள், சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
தவறான கருத்துகளை மக்களிடத்தில் விஜய் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் விஜய்யால் பேசவும் முடியவில்லை, வாய்ப்பும் இல்லை. அதனால் புதுச்சேரியில் இப்படி பேசியிருக்கிறார். விஜய் பேசியதில் 90% உண்மை இல்லை. மத்திய அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Puducherry (Pondicherry)
December 09, 2025 10:18 PM IST
“புதுச்சேரியில் ரேஷன்; விஷயம் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்” – பதிலடி கொடுத்த அமைச்சர் நமச்சிவாயம்


