Last Updated:
New pope | போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, புதிய போப்பை தேர்ந்தெடுக்க வரும் 7 ஆம் தேதி கார்டினல்களின் ரகசிய கூட்டம் தொடங்குகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்காக கார்டினல்களின் ரகசிய கூட்டம் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் தேதி காலமானார். உலக நாடுகளின் தலைவர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு போப் பிரான்ஸிஸ் உடல் கடந்த 26 ஆம் தேதி வாடிகனில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான பணிகளை வாடிகன் தொடங்கியுள்ளது. போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல்களின் ரகசிய கூட்டம் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கார்டினல்கள் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்றிரவு கூடி சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து மே 7 ஆம் தேதி வரை தினமும் சிறப்பு திருப்பலி நடத்த உள்ளனர்.
மே 7 ஆம் தேதி நடைபெறும் கார்டினல்களின் ரகசிய மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 135 கார்டினல்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர். புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும். இது ஓரிரு நாளிலோ அல்லது வாரக்கணக்கிலோ நீளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அதேநேரம் கடந்த 2005 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற புதிய போப் ஆண்டவருக்கான தேர்வு இரண்டு நாட்களில் முடிவடைந்தது கவனிக்கத்தக்கது.
April 29, 2025 2:59 PM IST


