Last Updated:
ஒருவேளை நீங்கள் உங்களுடைய கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்தி வந்தால் புதிய கடன் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
பெரும்பாலானவர்கள் ஒரு புதிய கடனை வாங்குவதற்கு முன்பு சற்று தயங்குவதுண்டு. இதற்கு காரணம் புதிய கடனால் அவர்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமோ என்ற பயம் தான். அளவுக்கு அதிகமாக கடன்கள் வாங்குவது கிரெடிட் ஸ்கோரை குறைக்கும் என்பது யாரோ ஒருவர் சொல்லி தெரிந்ததன் காரணமாகவே இந்த தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் புதிய கடன் வாங்குவது தற்காலிகமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்குமே தவிர நாளடைவில் அந்த கடனை நீங்கள் சிறப்பாக நிர்வகிக்கும் போது அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை வலுப்படுத்துவதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமையும்.
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்படி கடன் வாங்குகிறீர்கள்? எவ்வளவு அடிக்கடி கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் மற்றும் அதனை பொறுப்புடன் எப்படி திருப்பி செலுத்துகிறீர்கள் என்பதுதான். நீங்கள் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய சுய விவரத்தை மதிப்பீடு செய்வதற்கு உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் ஹார்ட் என்குயரி ஒன்றை செய்வார்கள்.
இந்த ஒரே ஒரு என்கொயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒரு குறுகிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான என்கொயரி செய்யப்படும் போது அது உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக அமைந்து, நீங்கள் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதாக அமைப்பு எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையும்.
உங்களுக்கான கடன் அங்கீகரிக்கப்பட்டதும் நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகை அதிகரிக்கிறது. அதிக கடன் தொகை இருப்பது இயற்கையாகவே அல்காரிதத்தை எச்சரிக்கையாக மாற்றுகிறது. ஒருவேளை நீங்கள் உங்களுடைய கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்தி வந்தால் புதிய கடன் நிச்சயமாக உங்களுக்கு உதவும். சரியான நேரத்தில் கடன்களை செலுத்துவது உங்களுடைய ரீபேமெண்ட் வரலாற்றில் ஒரு பாசிட்டிவான மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும். புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு அல்லது தங்களுடைய பொருளாதார பயணத்தை ஆரம்பித்திருப்பவர்களுக்கு சிறிய அளவிலான பர்சனல் லோன் அல்லது எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் போன்ற கடன்கள் ஏற்றதாக இருக்கும்.
அதே சமயத்தில் நீங்கள் பல்வேறு வகையான கடன்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள். உதாரணமாக கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்ற கடன் கலவை உங்களுடைய கடன் சுயவிவரத்தில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கடன் வாங்கும் போது உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படப் போவது கிடையாது. ஆனால் அந்த கடனை நீங்கள் சரியாக திருப்பி செலுத்தாத பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
ஒருவர் இத்தனை எண்ணிக்கையிலான கடன்களை தான் வாங்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு நிலையான எண்ணும் கிடையாது. இது ஒருவருடைய வருமானம், கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் மற்றும் மாத பட்ஜெட்டில் EMI எப்படி சௌகரியமாக பொருத்தப்படுகிறது என்பதை பொறுத்து அமையும். ஆனால் அதே சமயத்தில் உங்களுடைய கடன் பயனீட்டு விகிதம் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து நீங்கள் கடன் வாங்குவதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.
ஆகையால், அடுத்த முறை கடன் வாங்கும் போது உங்களிடம் நீங்களே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்: உண்மையில் எனக்கு இந்த கடன் தேவையா? EMI தொகையை சௌகரியமான முறையில் ஒவ்வொரு மாதமும் என்னால் சமாளிக்க முடியுமா? தாமதிக்காமல் என்னால் இந்த கடனை திருப்பி செலுத்த முடியுமா? இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் என்றால் கடன் வாங்குவதற்கு நீங்கள் பயப்பட தேவையில்லை.
December 15, 2025 5:32 PM IST


