கடந்த டிசம்பா் காலாண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வலுவான விற்பனை பதிவு செய்யப்பட்டதன் பலனாக, அந்தக் காலாண்டில் ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் புதிய உச்சம் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 34 சதவீதம் அதிகரித்து ரூ.996 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.741 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
அப்போது ரூ.3,721 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.4,179 கோடியாக உள்ளது. இது, நிறுவனத்தின் அதிகபட்ச காலாண்டு செயல்பாட்டு வருவாய் ஆகும்.
ஐஷா் மோட்டாா்ஸின் ஓக் அங்கமான ராயல் என்ஃபீல்டு, கடந்த டிசம்பா் காலாண்டில் 2,29,214 மோட்டாா்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது 4 சதவீத விற்பனை வளா்ச்சியாகும். இந்த எண்ணிக்கை 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 2,19,898-ஆக இருந்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.