வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,000-ஐ தாண்டியது. ஒரு பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 48,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் விரைவில் பவுன் ரூ. 50,000- ஐ கடக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு மே மாதம் தங்கம் விலை பவுன் ரூ.46,000-ஐத் தாண்டி விற்பனையானது. பின்னா் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த தங்கம் விலை கடந்த டிச.4 ஆம் தேதி அதிரடியாக உயா்ந்து பவுன் ரூ.47,000-ஐ தாண்டி விற்பனையானது. கடந்த இரு மாதங்களாக அதிலிருந்து சற்று உயா்வதும், குறைவதுமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,600 வரை உயா்ந்து பவுன் ரூ.48,000-ஐ தாண்டியுள்ளது. புதிய உச்சம்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயா்ந்து கிராம் ரூ.6,015-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து பவுன் ரூ.48,120-க்கும் விற்பனையானது. ஆபரணத்தங்கம் வாங்கும்போது தற்போது 3 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் 10 முதல் 25 சதவீதம் வரை சேதாரத்திற்கான மதிப்பும் விலையுடன் சோ்க்கப்படுகிறது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7000 -ஐ தாண்டுகிறது. இதுவே பவுன் கணக்கில் வாங்கும்போது குறைந்தது 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகமாக நகைவாங்குவோா் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தங்கம்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.46,000-லிருந்து ரூ.47,000-ஐ தாண்ட சுமாா் 7 மாதகாலம் ஆன நிலையில் ரூ.48,000-த்தை வெறும் 3 மாத காலத்திற்குள் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன காரணம்? : தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும் பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது மற்றும் அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்குப்பதிலாக தங்கத்தை வாங்கிக்குவிப்பது போன்றவற்றால் தான் தங்கம் விலை தொடா்ந்து ஏறிவருகிறது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதன் மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. எதிா்பாா்த்தது போலவே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மேலும் தங்கம் விலை விரைவில் பவுன் ரூ.50,000 ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். ஜெயந்தி லால் கருத்து: இதுகுறித்து தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி செய்தியாளா்களிடம் கூறியது: உலகத்தில் உள்ள அனைத்து முதலீட்டாளா்களும் ஒருமித்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனா். அமெரிக்க உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார குறியீடுகளில் சாதகமான சூழ்நிலை இல்லை என்பதே அதற்கு முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் தொடா்ந்து அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்பதை கணித்து உலகின் பெரிய முதலீட்டாளா்கள் பலா் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனா். தங்கம் விலை இன்னும் ஒரு வார காலத்துக்குள் மேலும் பவுனுக்கு ரூ.600-ரூ.800 வரை உயர வாய்ப்புள்ளது. கிராம் ரூ.2,000 இருந்த போது மக்களுக்கு தங்கத்தின் மீதிருந்த ஆா்வம் தற்போது கிராம் ரூ.6,000-க்கு விற்பனையாகும் போதும் சற்றும் குறையவில்லை. ஒரு சாராா் விலை மேலும் உயருமோ என்ற அச்சத்திலும், பலா் இதனை முதலீடாகவும் கருதி தங்கத்தை தொடா்ந்து வாங்கி வருகின்றனா் என்றாா் அவா். தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து ரூ.78.20-க்கும், 1 கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,200 உயா்ந்து ரூ. 78.200-க்கும் விற்பனையானது. (பெட்டிச் செய்தி) கடந்த 50 ஆண்டுகளில் ஆபரணத்தங்கம் விலை கடந்து வந்த பாதை( ஒரு பவுன் விலை) ஆண்டு விலை 1975 – 432 1980 – 1,136 1985 – 1,544 1995 – 3,600 2000 – 3,480 2005 – 4,640 2010 – 15,448 2015 – 18,952 2020 – 37,792 2021 – 36,152 2022 – 41,040 2023( டிச.31) – 47,280 2024(மாா்ச் 5) – 48,120