இந்த ஆண்டுக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளதாகவும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறையையும், ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான சிக்கல்களையும் கணிசமாகக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தேர்வுகளை நடத்தி பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆலோசனைக் குழுக் கூட்டம்
ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழுவின் கீழ் நிறுவப்பட்ட ‘கல்வி சபையை நிறுவுவதற்கான துணைக் குழுவின்’ தலைவரான பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவால் இலங்கையில் கல்வி சபையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, அமைச்சு ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தொடர்புடைய அறிக்கையை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவும், பொது அறிவிப்புகள் மூலம் அறிக்கை குறித்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற ஒரு மாத கால அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், பாடசாலைகளில் உள்ள பௌதீக வளப் பற்றாக்குறை தொடர்பான உபகுழுவின் முன்னேற்றம், உபகுழுவின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்கவினால் முன்வைக்கப்பட்டது.
தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் இந்த அமைச்சகம் தொடர்பான விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

