இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை எண்ணப்பட்டவற்றில் அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்றார்.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இவர்களை தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களத்தில் இருந்தனர்.
வாக்குப்பதிவு நிலவரம்: நேற்று முடிந்த வாக்குபதிவில், அதிகபட்சமாக நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தலைநகர் கொழும்பில் 75%, புத்தளம் மாவட்டத்தில் 78%, மொனராகலையில் 77%, பதுளையில் 73%, கண்டியில் 76%, இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் 74%, கேகாலையில் 72%, குருநாகல் மாவட்டத்தில்70%, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 65.9%, வன்னி தேர்தல் மாவட்டத்தில் 65%, மட்டக்களப்பு 64% என வாக்குகள் பதிவாகின என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுர குமார திசநாயக்க அதிபராக வாய்ப்பு: இதற்கிடையே, இன்று நடந்து வரும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை எண்ணப்பட்டவற்றில் அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்றார்.
மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதன்மூலம், இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க அதிபராக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இடதுசாரி கொள்கையை பின்பற்றி வரும் அனுர குமார திசநாயக்க கடந்த ஐந்து வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார். அதன் முடிவு தான் தற்போதைய தேர்தலில் எதிரொலித்து வருகிறது.
இதே தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உட்பட பலர் பலத்த பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் நமல் ராஜபக்சே 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
