சென்னை: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு இணையதளமான இன்டீட், ‘இன்னாகுரல் பேமேப் சர்வே’ என்ற பெயரில் ஆய்வு மேற்கொண்டது. கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறைசார் போக்கு மற்றும் தொழிலாளர் மனநிலையை புரிந்து கொள்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் 1,311 அதிகாரிகள் மற்றும் 2,531 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. புதியவர்களுக்கான (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) தொடக்க நிலை சம்பளப் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. புதியவர்கள் மாதம் ரூ.30,100 சம்பாதிக்கிறார்கள். இதுபோல மும்பை, ஹைதராபாத்தில் புதியவர்களுக்கான மாத சம்பளம் 28,500 ஆகவும் பெங்களூருவில் ரூ.28,400 ஆகவும் உள்ளது.
மென்பொருள் மேம்பாடு முதல் பொறியாளர்கள் வரை பல்வேறு பணிகளில் சேரும் புதியவர்கள் சராசரியாக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30,500 வரை சம்பளம் பெறுகிறார்கள். தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் அதிக சம்பளம் கிடைக்கிறது. நடுத்தர முதல் மூத்த நிபுணர்கள் (5 – 8 ஆண்டுகள்) மாதம் ரூ.85,500 வரை சம்பாதிக்கிறார்கள். யுஐ/யுஎக்ஸ் நிபுணர்கள் இப்போது மென்பொருள் உருவாக்குநர்களுக்கு இணையாக உள்ளனர். இதில் முதுநிலை ஊழியர்கள் மாதம் ரூ.65 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். ஹைதராபாத்தில் பணிபுரியும் நடுத்தர அல்லது முதுநிலை ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் மாதம் ரூ.69,700 வரை சம்பளம் பெறுகின்றனர்.
வாழ்வியல் செலவு: இண்டீட் இந்தியா விற்பனை பிரிவு தலைவர் சசி குமார் கூறும்போது, “சம்பள இயக்கவியல் மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் வாழ்க்கைச் செலவு மற்றும் தொழில் திறன் ஆகிய இரண்டுக்கும் ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் நகரங்களுக்கு ஊழியர்கள் முன்னுரிமை தருகின்றனர்” என்றார்.
தங்கள் வருமானம், நகரின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இல்லை என்று 69 சதவீத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேறுபாடு டெல்லி (96%), மும்பை (95%), புனே (94%) மற்றும் பெங்களூரு (93%) போன்ற பெருநகரங்களில் அதிகமாக உள்ளது. அதேநேரம், சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் வாழ்க்கைச் செலவு சமாளிக்கும் வகையில் இருப்பது தெரியவந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகமாக இருந்தாலும், உணர்வுபூர்வமான காரணங்களுக்காக வேறு நகரங்களுக்கு மாற 69% ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளுக்கான தேவையால், சம்பள விவகாரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான சேவை துறைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் சேரும் புதிய ஊழியர்களும் மாதம் ரூ.28,100 முதல் ரூ.28,300 வரை சம்பளம் பெறுகின்றனர். 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் ரூ.67,700 முதல் ரூ.68,200 வரை சம்பளம் பெறுகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பிஸினஸ்லைன் செய்திப் பிரிவு