புஜேரா,
புஜேராவில் புதுமையான முயற்சியாக சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புஜேரா நுண்கலை அகாடமியின் பொது இயக்குனர் அலி ஒபைத் அல் ஹபிதி கூறியதாவது:-
இசை எழுப்பும் சாலை
அமீரகத்தின் முக்கியமான நகரமாக புஜேரா திகழ்கிறது. இங்கு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புஜேராவில் உள்ள ஷேக் கலீபா சாலை ஆரம்ப பகுதியில் இருந்து புஜேரா நீதிமன்றம் வரை 750 மீட்டர் தொலைவுக்கு இசை எழுப்பும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது சாலையில் வெள்ளை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பட்டை கோடுகளில் காரின் டயர்படும் போது இசை எழுப்பும். இந்த இசை ஒலிக்கும் சாலை மத்திய கிழக்கு பகுதியில் முதல் முறையாகும்.
இந்த இசையானது பீத்தோவன் என்ற இசைக்கலைஞரின் 9-வது சிம்பொனியாகும். இந்த இசையானது கடந்த 1804-ம் ஆண்டு முதல் 1808-ம் ஆண்டு வரை இயற்றப்பட்டது ஆகும். நாற்பது வயதை நெருங்கும் போது, மொத்தமாக கேட்கும் திறனை இழந்திருந்தார் பீத்தோவன். செவித்திறனை இழந்ததால் இசையமைப்பதை விட்டு விட்டாரா? அதுதான் இல்லை. சொல்லப்போனால் அதன்பின்பு தான் பீத்தோவனின் ‘மாஸ்டர் பீஸ்’ என அறியப்படும் பல முக்கிய சிம்பொனிகள் உயிர் பெற்றன. புகழ்பெற்ற அவருடைய 9-வது சிம்பொனியை மேடையில் அரங்கேற்றிய போது, அவர் இசை அமைப்பதை அவரால் கேட்க முடியாமல் போனது. இதனால் இந்த சாதனையை திறம்பட நிகழ்த்திக் காட்டினார் அவர். பீத்தோவன், 1770-ம் ஆண்டு ஜெர்மனியின் பான் பகுதியில் பிறந்தவர் ஆவார். அந்த இசைக்கலைஞர் உருவாக்கிய இசையானது தற்போது புஜேராவில் கேட்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுமை:
இதன் காரணமாக இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இசை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அம்சமாகும். இதனை வெளிப்படுத்தும் வகையில் இது புதுமையான முயற்சியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.