அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப் பிரிவொன்று நிறுவப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களின் மூலோபாய இடங்களில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுவீதிகளில் பயணிக்கும் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை இரகசியமாகக் கண்காணித்து, அவற்றைப் புகைப்படம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு பெறப்படும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே வாகனப் பராமரிப்பு உத்தரவுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள், தமது வாகனங்களை உரிய முறையில் பழுதுபார்த்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வெரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனைக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி உத்தரவுகளுக்கு இணங்கத் தவறும் வாகனங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என வாகனப் புகை பரிசோதனைத் திட்டம் தெரிவித்துள்ளது.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதிலும், உரிமை மாற்றங்களை மேற்கொள்வதிலும் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

