Last Updated:
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் 80% நிறைவு பெற்றது.
பிகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த படிவத்தை 80 விழுக்காடு வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள், தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து படிவங்களை வழங்கி வருகின்றனர். அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து வரும் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால், பல்வேறு தரப்பினரின் வாக்குரிமை பறிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சேர்க்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது.
இந்த வழக்கு வரும் 28 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணி ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டதாகவும், அதில் 80.11 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது படிவங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
July 13, 2025 4:24 PM IST


