Last Updated:
Bihar New Chief Minister | பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பிகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பிகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைப்பதற்கான பணிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி துரிதப்படுத்தியுள்ளது.
பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
அதனடிப்படையில், பிகார் சட்டப்பேரவை கலைக்கப்படுவது குறித்து அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் 10 ஆவது முறையாக முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
November 18, 2025 9:11 AM IST
பீகார் புதிய முதல்வர் யார்… அமைச்சரவையில் யாருக்கு எவ்வளவு இடங்கள்… இன்றைய என்.டி.ஏ கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு


