Last Updated:
ஒரு வழியாக காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 13 தொகுதிகளும், விசிகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணியில் சிபிஐக்கு சீட் ஒதுக்காதது அக்கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது.
பீகார் தேர்தலைப் போன்றே புதுச்சேரி தேர்தலிலும் நட்பு மோதல் உருவாகி இருக்கிறது. இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் திமுக – காங்கிரஸ் கட்சிகள், சில தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதிநாள் நெருங்கும் வரையிலும், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் – திமுக கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், பெரும் குழப்பம் நிலவியது.
இதனால் அந்தந்த கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளை வேட்புமனுத் தாக்கல் செய்ய தலைமை அறிவுறுத்திய நிலையில், 23 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சித் தலைமை அங்கீகாரம் வழங்கும் ஏ படிவம் மற்றும் பி படிவத்துடன் மனுத் தாக்கல் செய்தனர்.
பின்னர் ஒரு வழியாக காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 13 தொகுதிகளும், விசிகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணியில் சிபிஐக்கு சீட் ஒதுக்காதது அக்கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இப்படியான சூழலில், திமுகவுக்கென்று ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்கள் மனுவை வாபஸ் பெற மறுத்து, வாக்கு சேகரிப்பிலும் களமிறங்கினர்.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், நேற்றுடன் நிறைவடைந்தபோதிலும், திமுக போட்டியிடும் 5 இடங்களில், காங்கிரஸ் நிர்வாகிகள் மனுவை வாபஸ் பெறவில்லை. இதனால், காலாப்பட்டு, ராஜ்பவன், மங்கலம், திருபுவனை மற்றும் காரைக்கால் தெற்கு என திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில், காங்கிரஸும் களம் காண்பது, இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதி போக, ஊசுடு மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக விசிக அறிவித்தது. தற்போது அந்த இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. நெட்டப்பாக்கம், ஊசுடு தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், விசிகவும் மோதுகின்றன. உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ், விசிக போக, சிபிஐ கட்சியும் களம் காண்கிறது.
இந்தியா கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் களம் காணும் லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருபுவனையில் காங்கிரஸ் – திமுக – சிபிஎம் கட்சிகள் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது. அடுத்தடுத்த திருப்பங்களால், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஆட்டம் கண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
பீகார் பாணி… ஒரே அணி… பல வேட்பாளர்கள் – புதுச்சேரியில் ஆட்டம் காணும் ‘இந்தியா’ கூட்டணி! | Puducherry Election


