Last Updated:
காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியிலும் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன – பிரசாந்த் கிஷோர்
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
ஐபேக் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி பல்வேறு தேர்தல்களில் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தற்போது முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். அவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது கட்சி பீகார் தேர்தலில் களம் காணவுள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இருப்பினும் அவர் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டவும், கட்சியை வலுப்படுத்தவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) நிச்சயமாகத் தோல்வி ஏற்படும். நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு (JDU) கட்சி 25 இடங்களைக் கூட வெல்லப் போராடும். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
இதேபோன்று காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியிலும் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அந்த கூட்டணி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
October 15, 2025 4:41 PM IST
‘பீகார் தேர்தலில் போட்டியில்லை.. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்’ – பிரசாந்த் கிஷோர் பேட்டி


