243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
இந்தக் கூட்டணியில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே அவர் இந்த தொகுதியில் இருந்து 2 முறை போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதே தொகுதியில் அவர் மீண்டும் களம் காண்கிறார். இதற்கிடையே காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
அதனை இன்று செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் மறுத்திருந்தார். இந்நிலையில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 57 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, JD(U) மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தத் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
October 15, 2025 4:35 PM IST

