Last Updated:
57 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் இன்று வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் ரகோபூர் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
இந்தக் கூட்டணியில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே அவர் இந்த தொகுதியில் இருந்து 2 முறை போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதே தொகுதியில் அவர் மீண்டும் களம் காண்கிறார்.
இந்நிலையில் அவர் வேட்பு மனுவை இன்று தந்தையும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தாயார் ராப்ரி தேவியுடன் நேரில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
எங்களது கூட்டணியில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. மக்களின் ஆதரவுடன் மிகுந்த ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறோம். பீகாரில் தேசிய ஜனநாயக அரசுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. என்று தெரிவித்தார். இதற்கிடையே 57 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் இன்று வெளியிட்டுள்ளது.
October 15, 2025 4:05 PM IST


