Last Updated:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கிறது. அங்கு எதிர்க்கட்சித் தலைவர் யார் தெரியுமா?
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், இரு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவித்திருந்தன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி 202 இடங்கள் என்ற பிரமாண்ட வெற்றியை பெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 101 இடங்களில் போட்டியிட்டன. இதில், நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் 85 இடங்களை பெற்ற நிலையில், அதனை முந்தி, பாஜக 89 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதலமைச்சர் இருக்கை கிடைக்குமா என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
இது ஒரு பக்கம் இருக்க எதிர் கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணி மொத்தமே 35 இடங்களில் மட்டுமே வென்றன. அதுவும் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களிலும், 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் 25 இடங்களில் மட்டுமே வென்றன.
இந்நிலையில் எதிர்க்கட்சி வரிசை எந்தக் கட்சிக்கு கிடைக்கும். யார் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பேச்சு முக்கியமானதாக இருந்தது. காரணம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அந்தக் கட்சி மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10% பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி 243 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்களை அதாவது 10% உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய ஜனதாதளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது. அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
November 17, 2025 4:45 PM IST


