Last Updated:
தெலங்கானா மனுகூரில் பி.ஆர்.எஸ் அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடி, பொருட்களுக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடி தளவாடப் பொருட்களை வெளியே தூக்கிப்போட்டு காங்கிரஸ் தொண்டர்கள் தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள மனுகூரில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அந்த அலுவலகத்திற்கு பெரும் கூட்டமாகச் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும், அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் ஆகிய தளவாடச் சாமான்களை வெளியில் தூக்கி போட்டு ஒரு இடத்தில் குவித்து தீ வைத்து எரித்தனர்.
அந்த இடம் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது எனக் கூறி இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொடிக்கம்பத்தில் பி.ஆர்.எஸ் கட்சியின் கொடியை கீழே இறக்கி, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றினர்.
மேலும், அலுவலகத்தின் பெயர்களில் இருந்த பி.ஆர்.எஸ். பெயர்களை அழித்து இந்திரா பவனம் என்று பெயரை மாற்றி பதாகைகளையும் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
November 02, 2025 6:38 PM IST


