Last Updated:
வழக்கம் போல், தனது காதலிக்கு போன் செய்துள்ளார். ஒன்றுக்கு பலமுறை கால் செய்தபோதும், அவர் எடுக்காமல் இருந்துள்ளார்.
பீகாரில் காதலி மீதான கோபத்தில் அவரது கிராமத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து இளைஞர் ஒருவர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள், இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் அளவளாவியுள்ளனர். இந்த சூழலில் வழக்கம் போல், தனது காதலிக்கு போன் செய்துள்ளார். ஒன்றுக்கு பலமுறை கால் செய்தபோதும், அவர் எடுக்காமல் இருந்துள்ளார். அதேவேளையில், காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர், வில்லங்கமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின் வழித்தடத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார். ஏதே விபரீத முடிவு எடுக்கப் போகிறாரோ என்று அங்கிருந்தவர்கள் அஞ்சியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர் இடுப்பில் பாதுகாப்பாக கயிறு கட்டி, கையில் கட்டிங் பிளேடை எடுத்துக் கொண்டு மின் கம்பத்தில் ஏறியுள்ளார். மேலே ஏறியவர் அங்கிருந்த மின் கம்பிகளை ஒவ்வொன்றாக துண்டித்துள்ளார்.
அப்போது தான், தனது காதலியின் செல்போன் நீண்ட நேரம் பிஸியாக இருந்த ஆத்திரத்தில், அவரது கிராமத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தது தெரியவந்தது. கரண்ட் இருந்தால் தானே சார்ஜ் போட்டு காதலி யாரிடமாவது பேசுவார் என்ற நினைப்பில், ஒட்டு மொத்த கிராமத்தையும் பழிவாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
காதலி மீது கொண்ட கோபத்தில் ஒரு ஊரையே இருளில் தள்ளிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க மின்வாரியம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், காதலியை பழிவாங்க கரண்ட் கம்பியில் கை வைத்த இளைஞரை, போலீசார் கைது செய்து ஷாக் கொடுக்க ஆயத்தமாகியுள்ளனர். காதலிக்காக கரண்டை கட் செய்வது பீகாரில் இது ஒன்றும் புதுசு அல்ல என்று அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு பூர்ணிமா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில், நாள்தோறும் இரவில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காரணமே இன்றி நாள்தோறும் எப்படி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று மின்வாரிய ஊழியர்களை குழம்பிபோயுள்ளனர். விசாரணையில், இளைஞர் ஒருவர் தனது காதலியை யாருக்கும் தெரியாமல் பார்க்க செல்வதற்காக இரவில் மின்சாரத்தை துண்டித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று, தற்போது காதலியின் செல்போன் பிஸியாக இருந்ததால், இளைஞர் ஒருவர் ஒரு கிராமத்தையே இருளில் தள்ளியது பேசுபொருளாகியுள்ளது.
September 02, 2025 6:10 PM IST


