பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: விலங்கு கொழுப்பு பயன்படுத்தி தயாரிக்கப்படுமா?
இந்தியாவில் வரும் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர இருக்கின்றன. இதற்கான டெண்டரை அண்மையில் ரிசர்வ் வங்கி கோரி இருந்தது. இந்த டெண்டரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
இந்தியாவின் கரன்சி வரலாற்றிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் வர இருக்கின்றன. மத்திய அரசின் ஒப்புதலுடன், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934இன் பிரிவு 25இன் கீழ், 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பு கொண்ட 100 கோடி பிளாஸ்டிக் நோட்டுகளை விநியோகம் செய்து நேரடி பரிசோதனை செய்வதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட சாதாரண கிழிசல்களைத் தாங்கும் திறன் கொண்டவை, அதிக நாட்கள் உழைக்கக்கூடியவை. தண்ணீரில் நனைந்தாலும் பாழாகாது, கிருமிகள் மற்றும் அழுக்கு சேராமல் சுத்தமாக இருக்கும் , முக்கியமாக கள்ள நோட்டுகள் தயாரிப்பதை மிகவும் கடினமாக்கும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.
இதில், பாதுகாப்பு நெறிமுறைகளில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல், மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை கொண்டுவரும் பணியை ரிசர்வ் வங்கி தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
இதில் கஸ்மோ ஃபர்ஸ்ட் (Cosmo First) என்ற இந்திய பாலிமர் மற்றும் சப்ஸ்ட்ரேட் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. அடுத்ததாக சிசிஎல் செக்யூர் (CCL Secure) என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிளாஸ்டிக் நோட்டு தயாரிப்பு நிறுவனமும் பங்கேற்றுள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகெங்கிலும் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து தருகிறது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாணய தயாரிப்பு நிறுவனமான டி லா ரூ (De La Rue) உடன் கூட்டு சேர்ந்த ஒரு இந்திய சப்ஸ்ட்ரேட் உற்பத்தி நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ஏலத்தில் பங்கேற்கும் மற்றும் பிளாஸ்டிக் நோட்டு தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி முன்பு தயக்கம் காட்டியதற்கு ஒரு முக்கிய காரணம், பிரிட்டன் போன்ற சில வெளிநாடுகளில் கரன்சி நோட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு அல்லது அதன் டிஎன்ஏ துகள்கள் பயன்படுத்தப்படுவதால் எழுந்த சர்ச்சைகளே ஆகும். இதனை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு தயாரிப்பில் பாலிமர் சப்ஸ்ட்ரேட்டில் விலங்குகளின் கொழுப்போ அல்லது அதன் மூலக்கூறுகளோ சுத்தமாக இருக்காது என்பதற்கான முறையான சான்றிதழை ஏலதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் ரூபாய் நோட்டு தயாரிப்பில் பங்கேற்கும் நிறுவனங்கள் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். அதாவது, Ethics Agreement, இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் , தரகர் இல்லாத ஒப்பந்தம் ஆகியவற்றோடு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தங்களுக்கு இருக்கக்கூடிய பிற வணிக செயல்பாடுகளிலிருந்து, இந்தியாவிற்கான தங்களது வணிகத்தை முற்றிலும் தனித்தனியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற உறுதியை இந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

