ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த முன்னாள் வேதியியல் ஆசிரியர் 35 வயதான இந்திரஜித் பிஷ்னோய் இதேபோல் கங்காசாகர் மாவட்டம் முக்லாவாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 25 வயதான மனோஜ் பார்கவ் இருவருக்கும் ஏகப்பட்ட கடன் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. மாத சம்பளம் வாங்கி அவர்களது கடனை அடைக்கும் நிலையை இருவரும் கடந்து விட்டிருந்தனர்
கடன் தொல்லை கழுத்தை நெரிக்க இருவரும் சேர்ந்து பணம் சம்பாதிக்க ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதற்காக திட்டம் தீட்டிய அவர்கள், தங்களது வேதியியல் கல்வி அறிவை பயன்படுத்தி, பிரேக்கிங் பேட் வெப்சீரிஸ்சில் வருவது போல், உயர் ரக போதைப் பொருளை தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதற்காக டெல்லிக்கு சென்ற அவர்கள் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனங்களை வாங்கி வந்துள்ளனர். போலீசுக்குத் தெரியாமல் போதைப் பொருள் தயாரிக்க தனியாக வீடு ஒன்றைத் தேடி வந்துள்ளனர்.
அதற்காக ஸ்ரீகங்கா நகர் பகுதியில், ரித்தி-சித்தி என்க்ளேவில் உள்ள டிரீம்ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட்டை 2 மாதங்களுக்கு முன், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு ஒரு ஆய்வகத்தையே இருவரும் சேர்ந்து உருவாக்கினர் கண்ணாடி குடுவைகள், குழாய்கள், மானிட்டர்கள், ஆபத்தான ரசாயனங்கள், என கடந்த 2 மாதங்களாக அந்த வீட்டுக்குள் இருந்தபடி சுமார் 5 கிலோகிராம் அளவுக்கு மெஃபெட்ரோன் எனப்படும் உயர் ரக போதைப் பொருளை தயாரித்ள்ளனர்.
இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 15 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் அவர்கள் 4.22 கிலோகிராம் போதைப் பொருளை Drug Mafia கும்பலுக்கு விற்றுள்ளனர். இந்த போதைப் பொருளை சர்வதேச அரங்கில் MD என அழைக்கின்றனர். சந்தேகம் வராமல் இருக்க பள்ளி நாட்களில் வேலைக்குச் செல்வது, விடுமுறை நாட்களில் போதைப் பொருள் தயாரிப்பது என இருவரும் பிசியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது ரகசிய நடவடிக்கைகள் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்து வித்தியாசமான வாசனை மற்றும் அளவுக்கு அதிகமான மின்சார உபயோகம் போன்றவை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்ட போது அதிர்ந்து போயினர்.
உடனே போதைத் தடுப்புக் பிரிவினரான என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க அவர்களும் களத்தில் இறங்கினர். அந்த வீட்டுக்குள் இருந்து சுமார் 780 கிராம் MDஐ அவர்கள் மீட்டனர். அத்துடன் அசிட்டோன், பென்சீன், சோடியம் ஹைட்ரஜன், கார்பனேட், புரோமின், மெத்திலமைன், ஐசோபிரைல் ஆல்கஹால், மெத்தி புரோபியோபீனோன் என ஏகப்பட்ட ரசாயனங்களை கைப்பற்றினர்.
இதைடுத்து ஆசிரியர்கள் இருவரையும் பிடித்த அதிகாரிகள் அவர்கள் வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்திருக்கிறார்கள், இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்படுவது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரேக்கிங் பேட் பாணியில் வேதியியல் துறை ஆசிரியர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து உயர் ரக போதைப் பொருள் தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 11, 2025 7:16 AM IST
பிளாட்டை பூட்டி வைத்து ரகசிய வேலை… 2 மாதத்தில் ரூ.15 கோடி குவித்த நண்பர்கள்.. திடுக்கிடும் தகவல்கள்