உலு சிலாங்கூர், பிப்ரவரி 5:
தெற்கு நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் 433-வது கிலோமீட்டரில் இன்று அதிகாலை ஒரு விரைவுப் பேருந்தும், இரண்டு லாரிகளும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 5.12 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் ஒரு விரைவுப் பேருந்து, ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான 10 டன் லோரி மற்றும் ஒரு டிரெய்லர் லோரி ஆகியவை சிக்கின.
புக்கிட் செந்தோசா மற்றும் ரவாங் நிலையங்களைச் சேர்ந்த 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பேருந்தில் 14 ஆண்கள், 5 பெண்கள், 7 குழந்தைகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் இருந்தனர். இதில் 39 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் காலில் காயமடைந்து பேருந்துக்குள் சிக்கிக்கொண்டார். அவர் காலை 6.05 மணியளவில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.
இதன் ஓட்டுநர் (உள்ளூர்வாசி) லோரிக்குள் சிக்கிக் கொண்டார். அவரது காயத்தின் நிலை குறித்த முழு விபரம் இன்னும் தெரியவில்லை. அவருடன் இருந்த 39 வயது நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேநேரம் டிரெய்லர் ஓட்டுநருக்குக் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்ற பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் முக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.




