Last Updated:
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் தெற்கில், டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மனாய் நகரின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 62 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது, ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது. இந்நிலையில், மனாய் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பலாவு கடற்பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரையோர நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த 30ஆம் தேதி பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்து அந்நாட்டு மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
October 10, 2025 6:33 PM IST


