சான் பிரான்சிஸ்கோ: பிரேசில் நாட்டில் பணிபுரிந்து வரும் எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தின் ஊழியர்கள் கைது அச்சுறுத்துலுக்கு ஆளாகி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். போலிச் செய்திகளை பரப்புதல் மற்றும் நீதிக்கு இடையூறு செய்ததாகக் சொல்லி அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரேசில் அரசு எக்ஸ் தளத்தில் வலதுசாரி ஆதரவு கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டது. ஆனால், அதனை எக்ஸ் தரப்பில் செய்யவில்லை என தெரிகிறது. முடக்கச் சொன்ன கணக்குகள் குறித்த விவரத்தை பிரேசில் அரசும், எக்ஸ் நிறுவனமும் தெரிவிக்கவில்லை.
எக்ஸ் தளம் சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்காத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் பிறப்பித்தார். இந்நிலையில், நீதிபதி டி மோரேஸை கடுமையாக விமர்சித்துள்ளார் மஸ்க். அவர் பதவி விலக வேண்டும் எனவும் சொல்லி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“நீதிபதி டி மோரேஸ் சில எக்ஸ் தள பயனர்களின் கணக்கை முடக்க சொல்லி இருந்தார். அந்த கணக்குகளில் பதிவான ட்வீட்கள் ஊழல் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன. அந்த கணக்குகள் எக்ஸ் தள சேவை சார்ந்த வீதிமீறலில் ஈடுபட்டதாக சொல்லி முடக்குமாறு தெரிவித்தார். அனைத்து நாட்டு சட்டங்களுக்கும் உட்பட்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதை நாங்கள் ஏற்காத சூழலிலும் அதையே செய்கிறோம்.
தற்போது பிரேசிலில் பணியாற்றும் எக்ஸ் ஊழியர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள் கைது அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். பிரேசில் நாட்டில் நாம் நமது செயல்பாட்டை ஷட் டவுன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். வருவாய் இழப்பும் ஏற்படும். ஆனால், லாபத்தை காட்டிலும் கொள்கையே முக்கியம்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஸ்கின் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.