ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஐக்கியராஜ்ஜியத்துடன் இணைந்திருக்கவே விரும்புவதாக நேற்று நடந்து முடிந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் இருக்கும் என்று பிபிசி தெரிவித்திருக்கிறது.
ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 26 உள்ளூராட்சி மன்றங்களில் நடந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான நிலையில் பிபிசி தனது இந்த கணிப்பை அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, பிரிவினைக்கு எதிர்தரப்பு 1,397,000 வாக்குகள் (54%) பெற்றிருக்கிறது. பிரிவினை கோரி 1,176,000 (46%) பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
இதுவரை வெளியாகியிருக்கும் முடிவுகளின் அடிப்படையில் பிரிவினைக்கு எதிர்தரப்பே இந்த தேர்தலில் வெல்லுவார்கள் என்று பிபிசி தெரிவித்திருக்கிறது. இறுதி முடிவுகள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தவர்களின் சதவீதம் 55 சதவீதமாகவும், பிரிவினை கோரி வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாகவும் இருக்கும் என்று பிபிசி எதிர்வுகூறியுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அணிக்கு 1,822,942 வாக்குகள் கிடைத்தால் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரணி இந்த வாக்கெடுப்பில் வெல்லும் சூழல் நிலவுகிறது.
மீதமுள்ள உள்ளூராட்சி பிரதேசங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மணிநேரத்தில் இறுதி முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிரிட்டிஷ் நேரப்படி காலை 6.30 மணி ( இந்திய இலங்கை நேரப்படி 11 மணிக்கு) வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வியாழக்க்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர் என்று முன்னதாக வந்த வாக்குப்பதிவு விவரங்கள் தெரிவித்தன.
கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியது.
வெள்ளிக்கிழமை பின்னதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது