Last Updated:
கருத்து வேறுபாட்டால் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சத்தீஸ்கரில் பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று தாக்கிய சைக்கோ கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜிதேந்திர காசியா என்பவரைக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் இணை பிரியா ஜோடியாக இருந்த தம்பதிக்குள் நாளடைவில் விரிசல் விழ, கருத்து வேறுபாட்டால் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் கணவனுடனான பேச்சுவார்த்தை இப்பெண் குறைத்துக் கொண்டார். அதில் புத்தி மாறிய ஜிதேந்திரா தனது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நினைத்து சந்தேக புத்திக்குள் புகுந்துள்ளார்.
அதனால் மனைவியை வெளியே விடாமல் வீட்டிற்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்ய ஒருகட்டத்தில் இப்பெண் கணவனின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வேறு பகுதியில் வசிக்கும் மனைவியைச் சந்திக்கச் சென்ற ஜிதேந்திரா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தையில் குறை கூறி ஊர்க்காரர்கள் முன்னே களங்கம் விளைவித்துள்ளார். அதை தட்டி கேட்டு எதிர்த்து நின்ற மனைவியின் கைகளைக் கட்டி கண்மூடித்தனமாகத் தாக்கி காயப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், மனைவிக்கு மொட்டையடித்துக் கரி மற்றும் எஞ்சின் ஆயிலை ஊற்றித் தேய்த்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும் சிறுநீரை குடிக்கச் சொல்லி தன் குழந்தைகளை முன்பே மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் பிள்ளைகளை விட்டும், மனைவியை அடிக்கக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி சத்தீஸ்கரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ஜிதேந்திராவை கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரில் பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று தாக்கிய சைக்கோ கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.


