
பிரித்தானியாவில் அக்டோபர் முடிவிலான மூன்று மாத காலக்கட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.3 சதவீதமாக இருந்த நிலையில், இந்த அதிகரிப்பு பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசு வட்டங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலை இழப்பு 85,000 ஆக உயர்ந்துள்ளது. இது 2022 நவம்பருக்குப் பிறகான மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) இந்நிலையை “இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் சோர்வான வேலை சந்தை” என விவரித்துள்ளது. பல நிறுவனங்கள் பட்ஜெட் அறிவிப்பு வரை பணியமர்த்தல் செயல்முறைகளை நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ வருகின்றன.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய காப்பீட்டு வரி உயர்வு, புதிய பணியாளர்களை நியமிப்பதை மிகவும் செலவு அதிகமான முயற்சியாக மாற்றியுள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ONS இயக்குநர் லிஸ் மெக்யூன், கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது பணியாளர் எண்ணிக்கை 1,49,000 குறைந்துள்ளதாகவும், இதனால் இளைஞர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு, இந்த சவாலைச் சமாளிக்க 1.5 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்து 50,000 பயிற்சிகள் மற்றும் 3.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அறிவித்துள்ளது. இருப்பினும், தொழில் நிறுவனங்கள் குறைந்த அனுபவமுள்ள இளைஞர்களை நியமிக்க புதிய குறைந்தபட்ச ஊதிய திட்டம் முக்கிய தடையாக உள்ளதாக கூறுகின்றன.
பொருளாதார வல்லுநர்கள், இந்த வேலையின்மை புள்ளிகள் கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகான காலத்தில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், வங்கிக் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

