பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 வீதம் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் மாணவர் இணக்கத் தளமான Enroly வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது CAS வழங்கல் 26.9 வீதமும், சர்வதேச மாணவர் சேர்க்கை ஏற்றுக்கொள்ளல்கள் 22.1 வீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான வீழ்ச்சி
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் நாடு, பிராந்தியம் மற்றும் கல்வித்துறை அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக Enroly தெரிவித்துள்ளது.

சில நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், ஏனைய சில முக்கிய சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2026 செப்டம்பர் கல்வியாண்டுக்கான முழுமையான CAS வழங்கல் கடந்த ஆண்டை விட சுமார் 28 வீதம் குறையும் என Enroly கணித்துள்ளது.
இலங்கை மாணவர்களுக்கான CAS வழங்கல்
பிரிட்டனின் முக்கிய சர்வதேச மாணவர் சந்தைகளில், பாகிஸ்தான் மாணவர்களுக்கான CAS வழங்கலில் மிகப் பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது 57.9 வீதம் குறைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நைஜீரியா – 37.8% சரிவு, கானா – 36.4% சரிவு, இலங்கை – 36.3% சரிவு, பங்களாதேஷ் – 30.2% சரிவு, இந்தியா – 24.9% சரிவு
என தரவுகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) அறிமுகப்படுத்திய கடுமையான இணக்க விதிமுறைகள் காரணமாக இருப்பதாக Enroly தெரிவித்துள்ளது.
மேலும், சில பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இந்த நாடுகளில் இருந்து மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கான விசா நிராகரிப்பு விகிதம் முக்கிய மாணவர் அனுப்பும் நாடுகளில் அதிகரித்துள்ள சூழலிலேயே இந்த CAS சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

