லண்டன்:
பிரிட்டனில் நிரந்தரவாசம் பெறுவதற்கான (Indefinite Leave to Remain – ILR) விதிமுறைகளை மேலும் கடுமையாக்க பிரிட்டன் தொழிற்கட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
புதிய விதிகளின் கீழ், குடியேறிய விதம் மற்றும் அவர்கள் பெற்ற நலன்கள் ஆகியவற்றைப் பொறுத்து, நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பம் செய்ய குடியேறிகள் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.
இந்த நடவடிக்கை, பிரிட்டனில் சட்டப்படி குடியேறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாகும். நாட்டின் பொதுச்சேவைத் துறையில் அதிகரித்து வரும் அழுத்தம், மேலும் குடிநுழைவுக்கெதிராக வளர்ந்து வரும் பொதுமக்கள் மனநிலை ஆகியவற்றை சமாளிக்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“இந்த நாட்டில் என்றென்றும் தங்கி வாழ்வது ஒரு உரிமை அல்ல; அது ஒரு சலுகை. அதனை உழைப்பின் மூலம் சம்பாதிக்க வேண்டும்,” என்று உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அவரது பெற்றோர் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்தவரை, குடியேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்தாலும், அதன் அளவு அண்மையில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்
-
சட்டப்படி குடியேறி 12 மாதத்திற்கும் மேலாக அரசு நலன்கள் பெற்றவர்கள் – 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
-
முறையற்ற குடியேற்ற வழிகளில் வந்தவர்கள் – 30 ஆண்டு வரை காத்திருக்க வேண்டியது
-
அதிக வருமானம் பெறுவோர் – 3 ஆண்டுகளில் ILRக்கு விண்ணப்பிக்கலாம்
-
முன்னர் 5 ஆண்டுகளாக இருந்த தகுதி காலம் – 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது
பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்ட மதிப்பீட்டின் படி, 2026 முதல் 2030 வரை சுமார் 1.6 மில்லியன் பேர் ILRக்கு தகுதிபெறக்கூடும்.
இந்த மாற்றம், நாட்டின் குடியேற்றக் கொள்கையில் மிகப்பெரிய திருத்தமாகக் கருதப்படுகிறது.




