Last Updated:
இந்த மோசடியை முதலாளிக்குத் தெரியாமல் கடந்த 10 மாதங்களாக அரங்கேற்றி வந்திருக்கின்றனர்.
புதுச்சேரியில் பத்து மாதங்களாக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிக்கறியை திருடி, ஹோட்டல்களுக்கு விற்று சைடு பிசினஸை டெவலப் செய்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி, வில்லியனூர், சுல்தான் பேட்டை, புதியமேட்டு தெருவை சேர்ந்தவர் 24 வயதான சுஜன். இவர் சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நம்பிக்கைக்கு பாத்திரமான அந்த 4 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். அசார், இஸ்மாயில், ஜலால், பாஸ்கரன் ஆகிய 4 பேரும் முதலாளி எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்யக் கூடியவர்கள்.
“நம்பிக்கை என்றால் அது நாங்கள்தான். நாங்கள் தான் நம்பிக்கையின் மறு உருவம்..” என முதலாளியை நம்ப வைத்து நாசம் செய்துள்ளனர் இந்த நால்வரும். கடைக்கு வரும் கஸ்டமர்களை காக்க வைக்காமல் கறித்துண்டுகளை வெட்டிப்போட்டு அனுப்புவதில் இவர்கள் கில்லாடி. இதற்கு நடுவே தான் அவர்களது கில்லாடி கிட்டு வேலையை அந்த நால்வரும் அரங்கேற்றியிருக்கின்றனர். “நாங்க இருக்கோம் முதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” என சுஜனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு இவர்கள் செய்த மோசடி வேலை 10 மாதங்களுக்கு பின் தான் வெளிச்சத்துக்கே வந்துள்ளது.
அப்படி என்னதான் செய்து விட்டார்கள் இந்த நால்வரும். வாடிக்கையாளர் ஒரு கிலோ சிக்கன் கேட்டால் இவர்கள் ஒன்றரை கிலோ சிக்கனை எடுத்து துண்டு போடுவார்கள். அதில் வாடிக்கையாளருக்கு ஒரு கிலோவை அளந்து கொடுத்துவிட்டு அரைக்கிலோவை அலேக்காக அமுக்கி விடுவார்கள். இப்படியாக ஒரு நாளைக்கு 10 கிலோ முதல் 15 கிலோ வரை பக்கவாட்டில் திருடி சைடு பிசினஸை ஆரம்பித்திருக்கிறார்கள் நால்வரும். கோழிக் கழிவுகளை கொட்டி விட்டு வருகிறோம் முதலாளி என தினமும் ஒரு மூட்டையை எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் அந்த மூட்டையில் தான் இவர்கள் அமுக்கிய சுமார் 15 கிலோ சிக்கனை பதுக்கி வைத்து கடத்தியிருக்கிறார்கள். கடத்தப்பட்ட சிக்கனை பல சிறு உணவகங்களுக்கு எடுத்துச் சென்று குறைந்த விலைக்கு விற்று கல்லா கட்டியிருக்கின்றனர். கிடைத்த தொகையை நால்வரும் சரி சமமாக பிரித்துக் கொண்டுள்ளனர். இந்த மோசடியை முதலாளிக்குத் தெரியாமல் கடந்த 10 மாதங்களாக அரங்கேற்றி வந்திருக்கின்றனர். என்னடா இது. கோழி வரத்துக்கும், விற்பனைக்கும் கணக்கு பார்த்தால், கையில் காலணா நிற்க வில்லையே. ஆனால் பிசினஸ் மட்டும் ஓஹோவென நடக்கிறதே என சந்தேகம் அடைந்த முதலாளி சுஜன். கணக்கு வழக்கை கவனிக்க ஆரம்பித்தார்.
கோழி வரத்து மற்றும் விற்பனையை சோதனை செய்தபோது, கொள்ளை லாபம் வந்திருக்க வேண்டுமே என நினைத்தவர் எங்கேயோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அன்று முதல் துப்பறியும் சாம்புவாக மாறி கண்கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பித்தார். வழக்கம் போல் அன்று கோழிக்கழிவுகளைக் கொட்ட மூட்டையை தூக்க முயன்றுள்ளார் ஊழியர்களில் ஒருவரான அசார். உடனே சுதாரித்துக் கொண்ட முதலாளி சுஜன் மூட்டையை கீழே இறக்கி அதில் சோதனை செய்தபோது அதிர்ந்துபோனார்.
அதற்குள் சுமார் 10 கிலோ கோழி இறைச்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுஜன், அசாரைப் பிடித்து விசாரித்தார். அதில் அதிர்ந்து போன அசார், “ஐயா இதை நான் மட்டும் செய்யலீங்க, இஸ்மாயில், ஜலால், பாஸ்கரன் என நாங்கள் நால்வரும் கூட்டணி போட்டுதாங்க ஏமாத்துனோம்” எனக் கூற முதலாளிக்கு மயக்கமே வந்து விட்டது. பின் மயக்கம் தெளிந்து “எத்தனை நாளாடா இந்த மோசடி வேலை நடக்குது” எனக் கடும் கோபத்துடன் கேட்டபோது, பத்து விரல்களையும் விரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
பத்து நாளா? நடக்குதா? என்று கேட்டவரிடம் இல்ல மொதலாளி 10 மாசமாக நடக்குது எனக் கூறியதும் மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார் சுஜன். கடந்த 10 மாதங்களாக 10 முதல் 15 கிலோ வரை தினம் தோறும் கோழி இறைச்சியை திருடி விற்பனை செய்து சுமார் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கறிக்கடையின் உரிமையாளர் சுஜன் கொடுத்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு கிலோ இரண்டு கிலோ ஏமாற்றினால் மன்னித்து விடலாம், இப்படி ஒரேயடியாக கொத்து கொத்தாக திருடினால் எப்படி பொறுத்துக் கொள்வது என குமுறியிருக்கிறர் கறிக்கடை ஓனர் சுஜன். கோழி இறைச்சி கடையில் குளறுபடி செய்து ஊழியர்களே கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி கறிக்கடை ஓனர்கள் மத்தியல் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
Puducherry (Pondicherry)


