பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் சூழல் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதற்கட்ட தேர்தல் கடந்த 30 ஆம் தேதியும், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நேற்றும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் இமானுவேலின் மையவாதக் கூட்டணி, வலதுசாரியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரியான நியூ பாப்புலர் ஃப்ரண்ட் ஆகிய கூட்டணிகள் மோதின. ஆளும் கட்சி மீதான அதிருப்தி மற்றும் தேர்தல் பரப்புரைகளின் அடிப்படையில், மரின் லீ பென் தலைமையிலான வலதுசாரி கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பவே, வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும் இடதுசாரி கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிக்க:
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்!
இந்நிலையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று இடதுசாரி கூட்டணி தலைவர்கள் குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ள போதும், அவர்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
