Last Updated:
பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இதில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். வரும் 26-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில், கங்கை மற்றும் யமுனை நதியில் கழிவுநீர் கலக்கப்படுவதைத் தடுக்கக் கோரி மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரயாக்ராஜில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வரும் கிருமிகள் அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்
கங்கை நீரின் தரத்தை உறுதி செய்ய ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உத்தரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய தீர்ப்பாயம், இது தொடர்பாக காணொளி காட்சியில் ஆஜராகி விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நீர் தூய்மையாகவே உள்ளது; பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
February 19, 2025 10:15 PM IST
“பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல குடிக்கவும் உகந்ததுதான்” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்


