Last Updated:
சித்ரதுர்கா மாவட்டத்தில் பிரபல ரவுடி சந்தோஷ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு. 10 பேர் சரணடைந்தனர், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பிரபல ரவுடியை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்ற கனுமா. இவர், தாவணகெரேவில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் உள்ளன. சந்தோஷ், தாவணகெரே நகரில் உள்ள ஹடாடி சாலையில் உள்ள கிளப்பில் மது அருந்திவிட்டு, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த எட்டு பேர், அவரை சராமரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதை பார்த்த கிளப்பில் இருந்தவர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர்.
சந்தோஷை வெட்டுவதற்கு ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வருவது, தப்பிச் செல்ல முயற்சிக்கும் சந்தோஷை சுற்றி வளைத்து வெட்டுவது என அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளன. இந்த கொடூர கொலைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சந்தோஷின் மனைவி ஸ்ருதி அளித்த புகாரின்படி, வித்யா நகர் காவல் நிலையத்தில் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி., சரணபசவேஸ்வரா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சந்தோஷை கொலை செய்ததாக கார்த்திக், சாவலி சாந்து, நவீன், குண்டப்பா, பசவராஜ், ஹனுமந்தப்பா, கிட்டா விஜி, சிக்கமனஹள்ளி சிவு, ரகு, பிரசாந்த் ஆகிய 10 பேர் ஹொலல்கெரே காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரண் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தோஷின் நண்பர்கள் என்பது தெரியவந்தது. சந்தோஷுடன் சேர்ந்து கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், அதில் கிடைத்த பணத்தை சந்தோஷ் மட்டுமே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பணம் கொடுப்பதாக கூறிவிட்டு சந்தோஷ் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாலும், மேலும் போலீசில் நண்பர்களை காட்டிக் கொடுத்ததாலும் அவரை கொலை செய்ததாக சரடைந்தவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 10 பேர் சரண் அடைந்த நிலையில் சந்தோஷ் கொலையில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சந்தோஷின் கூட்டாளிகள் பழிக்குப்பழி வாங்க அடுத்த சம்பவத்தில் ஈடுபட் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைக்க, தீவிர விசாரணை நடந்து வருகிறது. சந்தோஷ் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


