மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும்
சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி
காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
சூட்சுமமாக களவாடப்பட்ட தங்க காப்பு
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் கடந்த
2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்கு குறித்த பெண் சென்றுள்ளார். அப்போது
அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை மிகவும் சூட்சுமமான
முறையில் அப்பெண் களவாடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நகைக்
கடை உரிமையாளர் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்
வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் முன்னால் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் அறிவிப்பு
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து தங்க காப்பு
ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும், தங்க
நகையையும் நீதிமன்றில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போதும், தூரப் பிரதேசங்களிலிருந்து வரும்
நபர்களிடம் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் வியாபாரங்களில் ஈடுபடும்போதும்,
வியாபாரிகளும், இப்பகுதி பொதுமக்களும், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு
களுவாஞ்சிக்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன வேண்டுகோள்
விடுக்கின்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

