Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வித்யா மடம் என்ற பெயரில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் பிரம்மச்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பகீர் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வித்யா மடம் என்ற பெயரில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும்நிலையில், பிரபல சாமியாராக வலம்வந்து கொண்டிருந்த இவர் மீது, தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. அதுவும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பகீர் புகார்கள் எழுந்தன.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். ஆனால், பிரயாக்ராஜ் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்ய மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.
அவரது புகார் மனுவில், வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 5வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டி.யை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தினார்.
மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணிகள் என்கிற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் விசாரித்தது. சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பது தொடர்பான போக்சோ சட்டத்தின் விதிகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல சாமியார் மீது பாலியல் புகார்… போக்சோ வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு… தாமதமாக வழக்குப் பதிந்த உ.பி. போலீஸ்…


