Last Updated:
பெங்களூரு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், ரகசிய கேமரா வைத்த பொறியாளர் ஸ்வப்னில் நாகேஷ் மாலி கைது. 30 பெண் ஊழியர்களின் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ந்தார். இது தொடர்பான விசாரணையில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆந்திராவை சேர்ந்த ஸ்வப்னில் நாகேஷ் மாலி என்பவர் ரகசிய கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் மன்னிப்பு கோரியதால், இப்பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என இன்ஃபோசிஸ் நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால், இதனை அறிந்த அப்பெண்ணின் கணவர் எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திராவை சேர்ந்த மாலி என்ற இளைஞரின் செல்போனில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 30 பெண் ஊழியர்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞரை கைது செய்த காவலர்கள், செல்போனில் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்களை மீட்டெடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Bangalore,Karnataka
July 02, 2025 7:21 PM IST
பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி பாத்ரூமில் ரகசிய கேமரா.. பெண் ஊழியர்களின் அந்தரங்க வீடியோ.. அதிர்ச்சி சம்பவம்!