Last Updated:
வங்கதேச முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது வங்கதேச முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் தொடரில் இன்று காலை போட்டி நடந்தது. இதில், வங்கதேசத்தின் சவார் நகரில் உள்ள மொஹம்மதியன் கிளப்பிற்கும், ஷைன்புகூர் கிளப்பிற்கும் இடையில் இன்று காலை போட்டி நடந்தது. இதில், தமீம் இக்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ஆரம்பத்தில், ஹெலிகாப்டர் மூலம் அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவரை பி.கே.எஸ்.பி மைதானத்திலிருந்து ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடியவில்லை. இதன் பின்னர் சிகிச்சைக்காக சவார் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“சவார் நகரில் உள்ள மருத்துவமனையில் தமீம் இக்பாலுக்கு ஆரம்பகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு இதயப் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை டாக்காவிற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் ஹெலிபேடுக்குச் செல்லும் வழியில், அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவசரமாகத் திரும்ப வேண்டியிருந்தது. மருத்துவ அறிக்கைகள் அவருக்கு மாரடைப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளன” என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் தேபாஷிஷ் சவுத்ரி கூறியிருக்கிறார். இந்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 24, 2025 12:31 PM IST