மாட்ரிட்: லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
28 வயதான டியாகோ ஜோட்டாவுக்கு கடந்த வாரம்தான் திருமணம் முடிந்திருந்தது. ரூட் கார்டோசோவாவை அவர், மணந்திருந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசி குழந்தை கடந்த ஆண்டுதான் பிறந்திருந்தது.
டியாகோ ஜோட்டா, போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரை வென்ற போர்ச்சுகல் அணியில் டியாகோ ஜோட்டா இடம் பெற்றிருந்தார். அவரது சகோதரரான 26 வயதான ஆண்ட்ரே சில்வா போர்ச்சுகலில் உள்ள பெனாஃபீல் கிளப்புக்காக விளையாடி வந்தார்.
டியாகோ ஜோட்டா கடந்த 2020-ம் ஆண்டு வுல்வ்ஸ் கிளப்பில் இருந்து விலகி லிவர்பூல் கிளப்பில் இணைந்தார். கடந்த சீசனில் பிரிமீயர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணியில் டியாகோ ஜோட்டா முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரது மரணம் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. லிவர்பூல் கிளப், போர்ச்சுகல் கால்பந்து சங்கம், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.