Last Updated:
போட்டியின்போது பல்வேறு வேலைகளையும் இழுத்துப்போட்டு தனி ஆளாக செய்துகொண்டிருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரபல கபடி வீரர் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் சரமாரியாக சுட்டத் தள்ளப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே கதிகலங்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சோஹனா கோப்பை கபடிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை 500 முதல் 600 பேர் வரையிலான பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர். இந்த போட்டியில் பிரபல கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங் என்கிற ராணா பாலசௌரியா கலந்துகொண்டார். கன்வர் திக்விஜய் சிங் இந்த கபடி போட்டியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களில் ஒருவராக இருந்தார்.
இதனால் போட்டியின்போது பல்வேறு வேலைகளையும் இழுத்துப்போட்டு தனி ஆளாக செய்துகொண்டிருந்தார். அப்போது கபடி போட்டியை காண இரண்டு பேர் இருசக்கரவாகனத்தில் அங்கு வந்து இறங்கினர். அவர்கள் கூட்டத்திற்குள் படிப்படியாக முன்னேறி கன்வரை நோக்கி சென்றுள்ளனர். அங்கு கன்வர் சகவீரர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் ரசிகர்கள் வந்து செல்பி எடுத்து சென்றனர்.
இதை பயன்படுத்திக்கொண்ட அந்த இரண்டு பேரும், கன்வர் அருகே சென்று தாங்களும் செல்பி எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் சம்மதிக்க மிகவும் நெருக்கமாக நின்று அவர்கள் செல்பி எடுக்க ஆரம்பித்தனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் சம்பவத்தை அவர்கள் இருவரும் அரங்கேற்றினர். தாங்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்த இருவரும் கன்வர் திக்விஜய் சிங்கை நோக்கி சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
சுமார் 7 தோட்டாக்கள் கன்வரை நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து அவரை துளைத்தெடுத்தது. இதனால் ரத்தம் தெறிக்க சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்த கும்பல் அலறியடித்து ஓடத் தொடங்கியுள்ளது. கூட்டத்தினர் தங்களை நெருங்கி விடக் கூடாது என்பதற்காக அந்த மர்மநபர்கள் இருவரும் வானத்தை நோக்கி சுட்டக் கொண்டே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த கன்வரை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் துப்பாக்கி சூடு நடந்தபோதே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த கன்வர் திக்விஜய் சிங்கிற்கு 10 நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றிருந்தது. வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே அவரது வாழ்வை முடித்து வைத்து விட்டனர் கொலையாளிகள்.
இப்படுகொலைக்கு செளத்ரி-சகன்பிரீத் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாபி பாடகர் சித்த மூஸ்வாலா கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் காரணம் எனத் தெரியவந்ததையடுத்து, லாரன்ஸை பஞ்சாப் போலீசார் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
இந்த கொலையாளிகளுக்கு தற்போது கொல்லப்பட்ட கன்வர் திக்விஜய் சிங் அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் லாரன்ஸ் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி தற்போது பழிக்குப் பழி கொலையை அரங்கேற்றியிருக்கின்றனர். இதுகுறித்து தங்களது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர். கொலையாளிகள் யார்? என்பது அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க பஞ்சாப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். போட்டியின்போது கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
December 17, 2025 12:42 PM IST


