சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகமான பனானா லீப் அப்போலோ (Banana Leaf Apolo) உணவகத்தை மூட வேண்டி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது.
இந்நிலையில், பனானா லீஃப் அப்போலோ அதன் கோழி விநியோக நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையையும் செலுத்திவிட்டதாக நேற்று திங்கள்கிழமை (ஜூன் 30) கூறியது.
இதனால் தோ தை சான் ஃபார்ம் (Toh Thye San Farm) என்ற கோழி விநியோக நிறுவனத்துக்கும் உணவகத்திற்கும் இடையேயான சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மேலும் பனானா லீப் அப்போலோ உணவகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்ப மனுவும் மீட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை CNA உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை 4ஆம் தேதி நீதிமன்ற விசாரணையில் விண்ணப்பம் திரும்பப் பெறப்படும் என்று பனானா லீஃப் அப்போலோவின் தலைமை நிர்வாக அதிகாரி சி. சங்கரநாதன் கூறியதாக CNA குறிப்பிட்டுள்ளது.
மேலும், “இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது” என்று திரு. சங்கரநாதன் கூறினார்.
மூடம் விண்ணப்பம்
அந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய கோழி விநியோக நிறுவனம், உணவகத்தை மூடுவதற்கு வேண்டி கடந்த ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.
வழக்கை முடித்து வைக்கும் மனு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் முன்னர் சொல்லப்பட்டது.
தற்போது அந்த பிரச்சனை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
50 ஆண்டுகாலமாக இயங்கும் பனானா லீப் அப்போலோ
சிங்கப்பூரில் 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பனானா லீப் அப்போலோ உணவகத்தில் இரண்டு கிளைகள் உள்ளன. அவை இரண்டும் இன்னும் இயங்கி வருகின்றன.
அங்கு மீன் தலை குழம்பு தான் தனித்துவமான உணவாகும், பெரும்பாலானோர் அதை சாப்பிடுவதற்காகவே அங்கு செல்வர்.
இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவில் உணவு பரிமாறும் பாரம்பரிய முறைப்படி வாழை இலைகளில் உணவுகள் பரிமாறப்படுகிறது.