வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்தார்.
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது எனவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் கடந்த மாதம் நடந்தபோது வன்முறை வெடித்தது.
இதனைதொடர்ந்து 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 25 சதவீதமாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்தார்.
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே உரையாற்றி ராணுவத் தளபதி வக்கார் உஸ் ஜமான், நாடு தற்போது புரட்சியை சந்தித்துள்ளது என்றார். தனது அழைப்பின் பேரில் அனைத்து கட்சி தலைவர்களும் டாக்கா வந்ததாகவும், அப்போது இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இடைக்கால அரசு நாட்டின் அனைத்து நிர்வாகத்தையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் வக்கார் உஸ் ஜமான் தெரிவித்தார். வன்முறையின் போது உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜமான் உறுதி அளித்தார்
வங்கதேசம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து சுமார் 11,000 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் வன்முறையால் அங்கு கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இதனிடையே வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசினா வெளிநாடு தப்பிச் சென்றார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம், பிற்பகல் 2.30 மணிக்கு அவர் வங்கதேசத்திலிருந்து வெளியேறினார். ஷேக் ஹசீனாவுடன் அவரது இளைய சகோதரி ஷேக் ரஹானாவும் செல்வதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வக்ஃப் வாரிய சொத்துகள் – புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீவிரம்
முதலில் அவர்கள் இருவரும் பயணித்த ஹெலிகாப்டர் இந்தியாவின் திரிபுராவில் இறங்குவதாக கூறப்பட்டது. எனினும் ஹெலிகாப்டர் அங்கு இறங்கவில்லை.ஷேக் ஹசீனா வந்த ஹெலிகாப்டர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் லண்டன் செல்வார் எனக் கூறப்படுகிறது.
.